
ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் 7-வது நாளான இன்று ஆடவர் ஹாக்கியின் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
ஆஸ்திரேலிய அணி கடந்த ஒலிமிபிக்ஸில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. அபிஷேக் அற்புதமான ஷாட்டை கோலாக மாற்றினார்.
இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத் தொடர்ந்து அடுத்த நிமிடமே கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அதனை கோலாக மாற்றினார்.
இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதன் பிறகு ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி கோலை அடித்தது.
2-வது பகுதியான 30-வது நிமிடத்தின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதன் பிறகு 3-வது பகுதியின் தொடக்கத்தில் பெனால்டி ஸ்டிரோக் மூலமாக ஹர்மன்பிரீத் சிங் கோல் அடிக்க இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
4-வது பகுதியில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய அணி 2-வது கோலை அடித்தது. இந்திய அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி எவ்வளவு போராடியும் கோலை சமம் செய்ய முடியவில்லை. எனவே இந்திய அணி இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
2020 ஒலிம்பிக்ஸில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. அதற்கு தக்க பதிலடியாக தற்போது இந்திய அணி இந்த ஆட்டத்தில் வென்றுள்ளது.
இதன் மூலம் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது இந்திய அணி.