ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லாமல் ஓய்வு பெறமாட்டேன்: தீபிகா குமாரி
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும்வரை கடுமையாக உழைப்பேன் என்று தீபிகா குமாரி தெரிவித்துள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இதில், ஒலிம்பிக்ஸ் மகளிர் வில்வித்தை ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
முன்னதாக, தீபிகா குமாரி பங்கேற்ற மூன்று ஒலிம்பிக் போட்டியிலும் அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் வெளியேறினார்.
2012- காலிறுதிச் சுற்றுடன் வெளியேற்றம், 2016 - காலிறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேற்றம், 2020- காலிறுதிச் சுற்றுடன் வெளியேற்றம், 2024- காலிறுதிச் சுற்றுடன் வெளியேற்றம்.
இந்நிலையில், “ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லாமல் ஓய்வு பெறமாட்டேன்” என்று தீபிகா குமாரி தெரிவித்துள்ளார்.
தீபிகா குமாரி பேசியதாவது: “நான் தொடர்ந்து விளையாடுவேன். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும்வரை கடுமையாக உழைப்பேன். ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லாமல் ஓய்வு பெறமாட்டேன். வில்வித்தையில் வேகமாக இருப்பது அவசியம். எனவே, வேகமாக விளையாடுவதில் நான் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஒலிம்பிக் போட்டியில் இதைத்தான் நான் கற்றுக்கொண்டேன்” என்றார்.