இன்னும் 3 ஐபிஎல் கோப்பைகளை வெல்ல வேண்டும்: கம்பீர் விருப்பம்

“கேகேஆர் அணியை வெற்றிகரமான அணியாக மாற்றுவதுதான் எங்களின் அடுத்த இலக்கு”.
கம்பீர்
கம்பீர் ANI

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகளை நெருங்க இன்னும் 2 ஐபிஎல் கோப்பைகளை வெல்ல வேண்டும் என கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2024 கோப்பையை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மிக எளிதாக வென்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்றது. இந்நிலையில் இன்னும் 3 ஐபிஎல் கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதே தனது விருப்பம் என கம்பீர் பேசியுள்ளார்.

ஸ்போர்ட்ஸ் கீடாக்கு கம்பீர் அளித்த பேட்டி:

“தற்போது அனைவரும் என்னைப் பற்றி பேசலாம். ஆனால், ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை நாங்கள் வெற்றிகரமான அணி இல்லை. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகளை விட நாங்கள் இன்னும் 2 ஐபிஎல் கோப்பைகள் பின்தங்கி உள்ளோம். அவர்களை வீழ்த்த இன்னும் 3 ஐபிஎல் கோப்பைகளை வெல்ல வேண்டும். அதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.

கேகேஆர் அணியை வெற்றிகரமான அணியாக மாற்றுவதுதான் எங்களின் அடுத்த இலக்கு. அதைவிட சிறந்த உணர்வு எதுவாகவும் இருக்க முடியாது. அதற்கானப் பயணம் தற்போது தொடங்கி உள்ளது.

ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதே இலக்காக இருக்கும். பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் போது புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருக்கும். இதைத் தொடர்ந்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும், பின்னர் கோப்பையை வெல்ல வேண்டும்.

ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு சவால்கள் இருக்கும். ஐபிஎல் போட்டியில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்றார்.

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in