
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான அன்ஷுமன் கெயிக்வாட் காலமானார். அவருக்கு வயது 71.
1974 முதல் 1987 வரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றார் அன்ஷுமன். இவர், இந்தியாவின் மிக வயதான கிரிக்கெட் வீரராக திகழ்ந்த தத்தாஜிராவ் கெயிக்வாட்டின் மகனாவார்.
இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்ட அன்ஷுமன் தலைமையில் இந்திய அணி 2000-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையில் 2-வது இடத்தைப் பிடித்தது.
அன்ஷுமன் கடந்த சில ஆண்டுகளாகவே ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.
அன்ஷுமன் கெயிக்வாடுக்கு தேவையான உதவிகளை பிசிசிஐ செய்யவேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவரின் சிகிச்சைக்காக ரூ. 1 கோடி நிதியுதவி வழங்குவதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அன்ஷுமன் கெயிக்வாட் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.