அற்புதத்தை நிகழ்த்திய பும்ரா: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா.
அற்புதத்தை நிகழ்த்திய பும்ரா: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
ANI

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் நியூயார்கில் நடைபெற்றது. மழையால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குப் போட வேண்டிய டாஸ் இரவு 8 மணிக்குப் போடப்பட்டது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அந்த அணியில் ஆஸம் கானுக்குப் பதில் இமாத் வாசிம் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

மீண்டும் மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் இரவு 8.50 மணிக்குத் தொடங்கியது. ஷஹீன் அஃப்ரிடி வீசிய இன்னிங்ஸின் மூன்றாவது பந்தில் 'பிக் அப்' ஷாட் மூலம் லெக் சைடில் அழகாக ஒரு சிக்ஸர் அடித்தார். முதல் ஓவர் முடிந்ததும் மீண்டும் மழை குறுக்கிட்டது. மீண்டும் ஆட்டம் தடைபட்டு இரவு 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

இடைவெளிக்குப் பிறகு நசீம் ஷா வீசிய முதல் பந்தையே விராட் கோலி அற்புதமாக கவர் டிரைவ் செய்து பவுண்டரி அடித்தார். அடுத்த இரு பந்துகளில் பாயிண்டில் கேட்ச் ஆகி கோலி மீண்டும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

அஃப்ரிடி வீசிய அடுத்த ஓவரில் லெக் சைடில் மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்று டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனார் ரோஹித் சர்மா.

தொடக்க பேட்டர்கள் தவிர்த்து மற்ற யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் களமிறங்கலாம் என ரோஹித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று கூறினார். இதற்கேற்ப, அக்‌ஷர் படேல் 4-வது வீரராகக் களமிறக்கப்பட்டார்.

அக்‌ஷர் படேலுக்கு பந்து ஓரளவுக்கு பேட்டில் சரியாகப்பட்டது. இதனால், அஃப்ரிடி ஓவரில் பவுண்டரியும், சிக்ஸரும் கிடைத்தது. ரிஷப் பந்துக்கு எதுவும் பேட்டில் சரியாகப்படவில்லை. விளிம்பில் பட்டு அங்கும் இங்கும் ஃபீல்டர்களிடமிருந்து பந்து தப்பியதால், ரிஷப் பந்தும் தப்பித்து வந்தார்.

பவர் பிளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது. 7-வது ஓவரில் மீண்டும் நசீம் ஷா அழைத்து வரப்பட்டார். இறங்கி வந்து விளையாட முயன்ற அக்‌ஷர் படேல், பந்தைத் தவறவிட்டு 20 ரன்களுக்கு போல்டானார்.

சற்று தடுமாறி வந்த ரிஷப் பந்த், ஹாரிஸ் ராஃப் வீசிய 10-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க இந்திய அணி 11 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.

ஹாரிஸ் ராஃப் பந்தை மிட் ஆஃப் தலைக்கு மேல் விளையாட முயன்று சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷிவம் துபே, நசீம் ஷா பந்தின் வேகத்தைச் சரியாகக் கணிக்காமல் முன்கூட்டியே பேட்டைவிட்டு அவரிடமே கேட்ச் ஆனார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நேரத்தில் முகமது ஆமீர் பந்துவீச வந்தார். இவரது பந்தை தூக்கி அடிக்க முயன்று மீண்டும் விளிம்பில் வாங்கினார் ரிஷப் பந்த். இந்த முறை பந்து பாபர் ஆஸம் கைகளைச் சென்றடைந்தது. இவர் 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜாவும் பந்தின் வேகத்தைக் கணிக்காமல் முதல் பந்திலேயே பேட்டைவிட்டு கவர்ஃபீல்டரிடம் கேட்ச் ஆனார்.

97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதால், கடைசி வரை பேட் செய்ய வேண்டிய பொறுப்பு ஹார்திக் பாண்டியாவிடம் சென்றது. அவரும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பும்ரா முதல் பந்திலேயே வெளியேறினார். அர்ஷ்தீப் சிங் கடைசி விக்கெட்டாக ரன் அவுட் ஆனார்.

20 ஓவர்கள் முழுமையாக பேட் செய்யாத இந்திய அணி 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது ஆமிர் 2 விக்கெட்டுகளையும், அஃப்ரிடி 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இந்திய அணி கடைசி 7 விக்கெட்டுகளை 30 ரன்களுக்குள் இழந்தது.

முதலிரு ஓவர்களில் ஒரு பவுண்டரி என்றாலும், பாபர் ஆஸமும், ரிஸ்வானும் ஓடியே 15 ரன்களை எடுத்துவிட்டார்கள். உடனடியாக மூன்றாவது ஓவரிலேயே அர்ஷ்தீப் நிறுத்தப்பட்டு பும்ரா அழைக்கப்பட்டார்.

பும்ரா, விக்கெட்டை வீழ்த்துவதற்கான பந்தை வீசி தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தார். டீப் ஃபைன் லெக்கில் கைகளுக்கு அழகாக வந்த மிக எளிதான கேட்சை ஷிவம் துபே தவறவிட்டார். இதனால், ரிஸ்வானுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், பும்ரா தனது அடுத்த ஓவரில் பாபர் ஆஸம் விக்கெட்டை வீழத்தினார். இந்த முறை ஸ்லிப்பில் சூர்யகுமார் யாதவ் மிக அற்புதமாக கேட்ச் பிடித்தார்.

நிறைய பந்துகளை வீணடித்ததால், ஹார்திக் பாண்டியா பந்தில் இறங்கி வந்து சிக்ஸர் அடித்தார் ரிஸ்வான். 6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 35 ரன்கள் எடுத்தது. பவர் பிளே முடிந்தவுடன் ரிஸ்வானும், உஸ்மான் கானும் விக்கெட்டுகளை பாதுகாத்து விளையாடினார்கள்.

10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 11-வது ஓவரில் முதன்முறையாக அக்‌ஷர் படேல் அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே உஸ்மான் கான் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால், ஃபகார் ஸமான் இதே ஓவரில் சிக்ஸர் அடித்து நெருக்கடியை இந்தியா பக்கமே திருப்பினார். அர்ஷ்தீப் சிங் ஓவரிலும் ஒரு பவுண்டரி சென்றது.

48 பந்துகளில் 48 ரன்கள் தேவை என்ற நிலையில் பாகிஸ்தான் இருந்தது. இந்த நேரத்தில் ஹார்திக் பாண்டியா அட்டகாசமாக ஒரு ஓவரை வீசி ஒரு ரன் மட்டும் கொடுத்து ஸமான் விக்கெட்டை வீழ்த்தினார். ரிஷப் பந்த் அற்புதமாக கேட்ச் பிடித்தார். 15-வது ஓவரில் பும்ரா பந்துவீச வந்தார். முதல் பந்திலேயே ரிஸ்வானை போல்ட் செய்தார். ரிஸ்வான் 44 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே பும்ரா கொடுத்தார்.

16-வது ஓவரை அக்‌ஷர் படேல் மிகச் சிறப்பாக வீசி 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். 17-வது ஓவரில் மீண்டும் ஒரு ஷார்ட் பந்தை வீசி ஷதாப் கான் விக்கெட்டை வீழ்த்தினார் ஹார்திக் பாண்டியா. கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

சிராஜ் 18-வது ஓவரை வைட், நோ-பால் என சற்று சுமாராகவே வீசியதால், பாகிஸ்தான் இந்த ஓவரில் மட்டும் பவுண்டரி அடிக்காமல் 9 ரன்கள் எடுத்தது. கடைசி இரு ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.

மிக முக்கியமான 19-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தில் இமாத் வாசிம் 1 ரன் எடுத்தார். அடுத்த இரு பந்துகளில் இஃப்திகாரால் ரன் எடுக்க முடியவில்லை. பந்தைத் தொடக்கூட அவரால் முடியவில்லை. 4-வது பந்தில் லெக் பை மூலம் 1 ரன் எடுக்க, 5-வது பந்தில் இமாத் வாசிமாலும் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பும்ரா ஃபுல் டாசாக வீசிய கடைசிப் பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்றார் இஃப்திகார். டைமிங் இல்லை. அர்ஷ்தீப்பிடம் கேட்ச் ஆனார்.

கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டன. ஸ்டிரைக்கில் இமாத் வாசிம்தான் இருந்தார். ஆனால், அர்ஷ்தீப் சிறப்பாக வீசிய யார்க்கர் பந்தில் கீப்பரிடம் கேட்ச் ஆனார் இமாத் வாசிம். இவர் 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.

அடுத்தடுத்து யார்க்கர் பந்துகளை வீசி அர்ஷ்தீப் நெருக்கடி கொடுத்தார். 4-வது பந்தில் சமயோஜிதமாக சிந்தித்த நசீம் ஷா, யார்க்கரை பந்தை உணர்ந்து ஸ்கூப் செய்து கீப்பர் தலைக்கு மேல் பவுண்டரி எடுத்தார். கடைசி இரு பந்துகளில் இரு சிக்ஸர்கள் தேவைப்பட்டன. 5-வது பந்தை நசீம் ஷாவால் பவுண்டரிக்கு மட்டுமே அனுப்ப முடிந்தது. கடைசிப் பந்து மீண்டும் சிறப்பான யார்க்கர்.

20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா இரு விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் மற்றும் அக்‌ஷர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் இது நல்ல ஸ்கோர், சிறப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் பேட் செய்ய வேண்டும் என முகமது ஆமிர் கூறியிருந்தார். பேட்டிங்கில் முதல் 12 ஓவர்களுக்கு இதைச் சரியாக செய்த பாகிஸ்தான், கடைசி 8 ஓவர்களில் தவறவிட்டது. இந்தியப் பந்துவீச்சாளர்களும் அட்டகாசமாகப் பந்துவீசினார்கள்.

இரு வெற்றிகளைப் பெற்றுள்ள இந்திய அணி 'ஏ' பிரிவில், புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் இரு தோல்விகளைச் சந்தித்துள்ளதால், சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைவது சிரமமாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in