
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவத்துக்கு வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது கடந்த 13-ம் தேதி மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் நாடு முழுக்கப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தின்போது ராகுல் காந்தி மக்களவைக்குள் இருந்தார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக, கடந்த இரு நாள்களாக அவை நடவடிக்கைகள் முடங்கின. இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து அமித் ஷா விளக்கமளித்தால் மட்டுமே அவை நடவடிக்கைகள் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக இச்சம்பவம் குறித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
வேலைவாய்ப்புகள் எங்கே? இளைஞர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
நிச்சயமாக இது பாதுகாப்பு குறைபாடுதான். இது நடந்ததற்கான காரணம் என்ன?. நாட்டின் முக்கியப் பிரச்னையே வேலைவாய்ப்பின்மை. பிரதமர் மோடியின் திட்டங்களால் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இந்தச் சம்பவத்துக்கான காரணம் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் தான் எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, சு. வெங்கடேசன், ஜோதிமணி உள்பட்ட 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். மாநிலங்களவையிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.