

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமத்திய ரேகையையொட்டிய இந்தியப் பெருங்கடல் - தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த ஜனவரி 5 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
அடுத்த 24 மணி நேரத்தில்...
இது நேற்று (ஜன. 6) அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுப்பெற்றுள்ளது. தற்போது சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கு திசையில் 1,270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த மண்டலம், அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை
இதன் காரணமாக ஜனவரி 8 அன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூா், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சுயாதீன ஆய்வாளர் ஹேமச்சந்திரனின் பதிவு
இதையடுத்து கடந்த 155 ஆண்டுகளில் 21 வது தாழ்வு மண்டலமாக இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“தென்கிழக்கு வங்ககடலில் நிலவக்கூடிய தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (07.01.2025) காலை 8:30 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்ககடல் நோக்கி நகரக்கூடும். கடந்த 155 ஆண்டுகளில் 21-வது தாழ்வு மண்டலமாக இன்று உருவாகியது காற்றழுத்த தாழ்வு மண்டலம். 21-ம் நூற்றாண்டின் ஜனவரி மாதத்தின் 6-வது புயல் சின்னம் இன்று உருவாகியுள்ளது. 2023 ஜனவரி 30-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. 2019 ஜனவரி 4-ல் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. 2014 ஜனவரி 4-ல் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. 2006 ல் குமரிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. 2005-ல் ஜனவரி 14 அன்று தெற்கு வங்ககடலில் புயல் உருவாகி எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் கடலிலேயே செயலிழந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
The India Meteorological Department has stated that the low pressure area that formed in the Indian Ocean has now strengthened into a low pressure area.