
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006 - 2011 திமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக 2011-ல் அதிமுக ஆட்சியின்போது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.72 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை 2016-ல் விடுவித்தது.
2017-ல் லஞ்ச ஒழிப்புத் துறை இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கின் விசாரணையைக் கடந்த நவம்பர் 27-ல் நிறைவு செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை ஒத்திவைத்தார். கடந்த 19-ம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட, டிசம்பர் 21-ல் தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என்றும், அப்போது இருவரும் நேரில் அல்லது காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
இதன்படி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இன்று (வியாழக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும், இந்தத் தண்டனையானது மேல்முறையீடு செய்வதற்காக 30 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பின் மூலம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை வகிப்பதற்கானத் தகுதியை இழக்கிறார். இதன்மூலம், 30 நாள்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் பொன்முடி உள்ளார்.