
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கக் கோருவது மற்றும் தென் மாவட்டங்கள் மழை குறித்தும் ஆலோசிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்.
டிசம்பர் தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. புயல் வெள்ளப் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். தமிழக அரசும் பாதிப்புகளை சீரமைக்க ரூ. 5,060 கோடியை மத்திய அரசிடம் கேட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளப் பாதிப்புகளை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இரண்டாவது கட்டமாக ரூ. 450 கோடியை மத்திய அரசு விடுவித்தது. ஏற்கெனவே முதற்கட்டமாக ரூ. 450 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மத்தியக் குழு பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தது. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு மத்தியக் குழு பாராட்டுகளைத் தெரிவித்தது.
இந்தப் பாதிப்புகளிலிருந்து முழுமை மீள்வதற்குள் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் தாலுகா காயல்பட்டினத்தில் ஓராண்டு பெய்யக் கூடிய மழைப் பொழிவு ஒரேநாளில் பெய்துள்ளது. இன்று (திங்கள்கிழமை) காலை 6 மணி நிலவரப்படி 96 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், தில்லியில் நாளை (செவ்வாய்க்கிழமை) இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவையிலிருந்து இன்று தில்லி புறப்பட்டார். இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரம் கோரியுள்ளார்.
இதுதொடர்பான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை (19.12.2023) புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்."