
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன், வரும் செப்டம்பர் 5-ம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என்று பதிலளித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. ஆளும் கட்சியான திமுக கூட்டணி கட்சிகளை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சிப் பூசல்கள், கூட்டணி இழுபறிகள் எனப் பல நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை நிகழ்வுகளுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவு அளிக்காதது அதிமுக வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியது.
எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் மீது கடந்த சில மாதங்களாக அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஈரோடு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது செங்கோட்டையன் வரவேற்பு கூட அளிக்கவில்லை. மேலும் பரப்புரைக்கு எந்தவித ஆதரவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் அன்னூரில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறாததால் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளாததும் குறிப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. .
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி (நேற்று) கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது, வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி அனைத்து விவரங்களும் முழுமையாக தெரிவிக்கப்படும், மனம் திறந்து பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.