
தொடர்ந்து 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழான கல்வித் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து, மத்திய பாஜக அரசை எதிர்த்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை வளாகத்தில் கடந்த 29-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர் கடந்த 30-ம் தேதி அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தொடர்ந்து 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சசிகாந்த் செந்தில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகாந்த் செந்தில், “காங்கிரஸ் தேசிய தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வலியுறுத்தலின் பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன். விரைவில் கல்வி இயக்கங்களுடன் சேர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தைக் காக்கும் போராட்டத்தைக் களத்தில் மேற்கொள்ள உள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார்.