ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்: நல்ல வாய்ப்பைத் தவற விட்டதா இந்தியா?

சிராஜ்
சிராஜ்ANI
2 min read

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஷார்துல் தாக்குருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றனர். தென்னாப்பிரிக்க அணியில் ஜெரால்டு கூட்ஸியா, டெம்பா பவுமா, பீட்டர்சனுக்கு பதிலாக லுங்கி இங்கிடி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் கேஷவ் மஹாராஜ் ஆகியோர் இடம்பெற்றனர். இது டிரிஸ்டன் ஸ்டப்ஸின் முதல் டெஸ்ட் ஆகும்.

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கைல் வெரைன் 15 ரன்களும், டேவிட் பெடிங்காம் 12 ரன்களும் எடுத்தனர். இந்தியாவிற்கு எதிராக தென்னாப்பிரிக்க அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்திய அணி தரப்பில் சிராஜ் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்டில் அவரது சிறந்த பந்துவீச்சு இது. மேலும், பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் ரன் எதுவும் கொடுக்காமல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. யஷஸ்வி ஜெயிஸ்வால் ரன் எதும் எடுக்காமல் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ரோஹித் மற்றும் கில் நல்ல கூட்டணியை அமைத்தனர். 55 ரன்கள் சேர்த்த இக்கூட்டணியை பர்கர் பிரித்தார். ரோஹித் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்னிலும், கில் 5 பவுண்டரிகளுடன் 36 ரன்னிலும் பர்கர் பந்தில் ஆட்டமிழந்தனர்.

இதன் பிறகு ஐயர் ரன் எதும் எடுக்காமல் பர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் கோலி நிதானமாக விளையாட, தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்த மறுபக்கத்தில் அவருடன் யாரும் நல்ல கூட்டணியை அமைக்கவில்லை. ராகுல் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த அனைவரும் டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக கோலி 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார். 153 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை இழந்த இந்திய அணி அதன் பிறகு ஒரு ரன் கூட சேர்க்கவில்லை. ரன் எதுவும் எடுக்காமல் கடைசி 11 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் இங்கிடி, ரபாடா, பர்கர் ஆகியோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 98 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு மார்க்ரம் மட்டும் கடைசி வரை பக்க பலமாக இருந்தார். எல்கர் 12 ரன்னிலும், டோனி டி ஜோர்ஜி மற்றும் ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் வெளியேறினர். மார்க்ரம் 36 ரன்களுடனும், டேவிட் பெடிங்காம் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது. முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்னும் 36 ரன்கள் பின்தங்கியுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in