
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அம்பத்தி ராயுடு சமீபத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாணைச் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு ஜனசேனா கட்சியில் இணைவாரா என்கிற எதிப்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து X தளத்தில் அம்பத்தி ராயுடு கூறியதாவது:
“நான் முழு மனதுடன் ஆந்திர மக்களுக்குச் சேவை செய்ய அரசியலுக்கு வந்தேன். இதை நிறைவேற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். நான் பல கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தேன், அதை சரி செய்ய பல உதவிகளையும் செய்தேன். ஒரு சில காரணங்களால் என்னால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியவில்லை. என்னுடைய கொள்கையும், அக்கட்சியின் கொள்கையும் ஒத்து போகவில்லை. இதை நான் குறையாக சொல்லவில்லை. இதைத் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலக முடிவு செய்தேன். எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் இந்த முடிவை எடுப்பதற்க்கு முன்பு பவன் கல்யாண் அண்ணனை ஒரு முறை சந்தித்து பேச சொன்னார்கள். எனவே அவரைச் சந்தித்து அரசியல் குறித்தும், வாழ்கையை குறித்தும் நிறைய பேசினேன். நான் என்னுடைய கிரிக்கெட் பயணத்தைத் தொடர துபாய்க்கு செல்கிறேன். ஆந்திர மக்களுக்காக எப்போதும் உறுதுணையாக நிற்பேன்” என்றார்.