
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மருத்துவமனை ஒன்றில் பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்தராவ் மருத்துவமனை முக்கிய அரசு மருத்துவமனையாகத் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் இந்த மருத்துவமனையின் இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்ததாகக் கூறப்படுகிறது. ஒரு குழந்தையின் விரல்களும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள்பட்டைப் பகுதிகளும் காயம் அடைந்துள்ளன. சிசிடிவி காட்சிகளில் எலிகள் நடமாடியது உறுதி செய்யப்பட்டது. குழந்தைகள் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குழந்தைகள் வார்டில் எலிகள் சுற்றித் திரியும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ள இந்தச் சம்பவம், மருத்துவமனையின் சுகாதாரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க மருத்துவமனை ஜன்னல்களில் இரும்பு வலைகள் அமைப்பது மற்றும் உணவு கொண்டு வருவதைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.