
சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரம் செய்து தர வேண்டும், தனியார்மயம் ஆக்கும் கொள்கையைக் கைவிட வேண்டும், என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாக போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து தூய்மைப் பணியாளர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக கைது செய்து கடந்த மாதம் 13-ம் தேதி வெளியேற்றினர்.
கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் தென் சென்னையின் கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், போராட்டம் நடத்த தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.