கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

கிளாம்பாக்கத்தில் பயணிகள் போராட்டம்: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
Published on

கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையின் புறநகர்ப் பகுதியான வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குப் பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இது குறித்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் சேகர்பாபு ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:

“கடந்த இரண்டு நாட்களாக கிளாம்பாக்கம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும், இன்னும் இரு சில அரசியல் தலைவர்களும் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். பேருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நள்ளிரவில் தான் எழுந்துள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் எந்த பிரச்னையும் இல்லை. கிளாம்பாக்கமாக இருந்தாலும் சரி, கோயம்பேட்டிலும் சரி வழக்கமாக இரவு 11 மணிக்கு மேல் குறைந்த அளவில் தான் பேருந்துகள் இயக்கப்படும். போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது வதந்தி.

அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது எனச் செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற உள்நோக்கத்துடன் இதனைச் செய்து வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையம் மீண்டும் இயங்குவது போன்ற தோற்றத்தை சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் செய்கின்றனர். பயணிகள் அதிகளவில் வந்த காரணத்தால் கூடுதலாக 130 பேருந்துகள் இயக்கப்பட்டன. முடிச்சூர் பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in