நேபாளத்தில் தொடரும் போராட்டம் : அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் | Nepal | GenZ Protest |

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் பல இடங்களில் வன்முறை தொடர்வதால் பதற்றம்...
நேபாளத்தில் தொடரும் போராட்டம் : அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் | Nepal | GenZ Protest |
ANI
1 min read

நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை விலக்கப்பட்ட பிறகும் போராட்டக்காரர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

நேபாளத்தில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்யாத பேஸ்புக், யூடியூப், வாட்ஸ்ஆப் போன்ற 26 செயலிகளை அந்நாட்டு அரசு தடை செய்தது. இது மக்களைக் கொந்தளிக்கச் செய்ததில், நேற்று (செப். 8) முதல் அந்நாட்டில் போரட்டங்கள் வெடித்து வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள் 'ஜென் சி போராட்டக்காரர்கள்' என்ற பெயரில் போராட்டங்களை முன்னெடுத்து, நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போராட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் பதவி விலகினார்.

இதையடுத்து, சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது. மேலும், அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இளைஞர்கள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. ஆனாலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்து வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், கண்ணாடிகளை அடித்து உடைத்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், முன்னாள் பிரதமர் புஷ்பகமல் தஹல் வீட்டின் கதவை உடைத்து போராட்டக்காரர்கள் உள்ளே புகுந்ததாகக் கூறப்படுகிறது. நாட்டின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த ராணுவம் திணறி வருகிறது. இதனால் இந்தக் கலவரத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர நேபாள பிரதமர் ஷர்மா ஒலி அவசரக் கூட்டத்திற்காக அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையில் நேபாளத்தில் வாழும் இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

”நேபாளத்தில் நடந்து வரும் சம்பவங்களை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இளைஞர்கள் உயிரிழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருடன் இந்தியா துணை நிற்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் நிதானத்தைக் கடைப்பிடித்து அமைதியான வழிமுறைகள், கலந்துரையாடல் மூலம் பிரச்னையை சரிசெய்வார்கள் என்று நம்புகிறோம். காத்மண்டு மற்றும் நேபாளத்தின் பல நகரங்களில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் நேபாள அதிகாரிகளின் நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Nepal | Gen Z Protest | Social Media Ban | Nepal youth protest | Kathmandu |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in