கடும் பேரிடர்களாக அறிவித்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: ஸ்டாலின்

கடும் பேரிடர்களாக அறிவித்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: ஸ்டாலின்
2 min read

சென்னை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை கடும் பேரிடர்களாக அறிவித்து மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதன்பிறகு, நெல்லை வர்த்தக மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆளுநர் வாரத்துக்கு ஓரிரு முறை தில்லி சென்று வருகிறார். அப்படி செல்லும் தில்லியில் வாதாடி போராடி நிதியைப் பெற்றுத் தந்தால், அவருக்கு நன்றிக் கடன் பெற்றிருப்போம்" என்றார்.

தொடர்ந்து, மத்திய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்பட வேண்டிய நிதி மற்றும் ஏற்கெனவே ஒதுக்கியுள்ள நிதி குறித்து விளக்கமளித்து அவர் கூறியதாவது:

"ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு பற்றிய விளக்கம் இது. மாநிலப் பேரிடர் நிவாரண நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்துக்கு இந்த நிதி எவ்வளவு என்பதை ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட நிதிக் குழு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானிக்கிறது. இதன்படி, தமிழ்நாடு பேரிடர் நிவாரண நிதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ. 1,200 கோடி. இதில் 75 விழுக்காட்டை, அதாவது ரூ. 900 கோடி ஒன்றிய தர கொடுக்க வேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது ரூ. 300 கோடியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒன்றிய அரசின் பங்கானது ஆண்டுதோறும் தலா ரூ. 450 கோடி என இரு தவணைகளாக வழங்கப்படும். ஒரு இயற்கை பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது, அந்த மாநில பேரிடர் நிவாரண நிதி போதவில்லையென்றால், இதைக் கடும் இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த வரலாறு காணாத வெள்ளத்தை இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். இதை நான் பிரதமரை நேரில் சந்தித்தபோது வலியுறுத்தினேன், மனுவாகவும் கொடுத்துள்ளேன். ஆனால், இன்று வரை இந்த இரு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை.

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த ரூ. 450 கோடி நிதி என்பது, இந்த ஆண்டு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டிய இரண்டாவது தவணை நிதிதானே தவிர கூடுதல் நிதியல்ல.

சவாலான நிதிநிலை சூழல் இருக்கக்கூடிய நேரத்தில் ஒன்றிய அரசு கூடுதல் நிதியை ஒதுக்காத போதிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசின் நிதியைக் கொண்டு செலவு செய்து நிவாரணப் பணிகளை செய்து வருகிறோம்.

சென்னையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இதுவரை ரூ. 1,500 கோடிக்கும் கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. இங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணப் பணிகளுக்கும் ரூ. 500 கோடிக்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி சேதமடைந்த சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள், குடிநீர்த் திட்டங்கள், மின் கட்டமைப்பு போன்றவற்றை சீரமைக்க பெரும் நிதி தேவைப்படும். இதற்காக, தமிழ்நாடு அரசு உடனடி முன்பணமாக மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ. 250 கோடியை விடுவிக்க ஆணையிட்டுள்ளேன். மேலும் தாமதமின்றி இந்த இரு பேரிடர்களையும், கடும் பேரிடர்களாக அறிவித்து, ஒன்றிய அரசிடம் கோரியுள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in