ஹர்மன்பிரீத் கௌர் அதிரடி : பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை அணி

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை அணி
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை அணிANI

ஒரு பந்து மீதமிருந்த நிலையில் மும்பை அணி இலக்கை எட்டி, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் 16-வது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆரம்பத்தில் வோல்வார்ட் 13 ரன்களுக்கு வெளியேற கேப்டன் மூனி மற்றும் ஹேமலதா நல்ல கூட்டணியை அமைத்தனர். பந்துவீச்சில் மும்பை அணி பலரைப் பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. முடிவில் சஜனா இந்த கூட்டணியைப் பிரித்தார்.

மூனி 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 35 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக விளையாடிய எவரும் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை. ஹேமலதா அதிகபட்சமாக 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜயன்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்கு யாஸ்திகா பாட்டியா நல்ல தொடக்கத்தை அமைத்து தந்தார். மறுமுனையில் ஹீலி மேத்யூஸ் 18 ரன்களிலும், சிவர் பிரண்ட் 2 ரன்களிலும் வெளியேற கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் யாஸ்திகா பாட்டியாவுடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தனர். பாட்டியா ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து வெளியேற, ஹர்மன்பிரீத் கௌர் கடைசி வரை விளையாடி வெற்றிக்கு உதவினார்.

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்மன்பிரீத் கௌர் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்ட ஒரு பந்து மீதமிருந்த நிலையில் மும்பை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் கௌர் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 48 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in