திமுக - காங்கிரஸ் பெண்களுக்கு விரோதி, பாஜக பெண்களை மதிக்கிறது: பிரதமர் மோடி

என்னால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை என வருத்தமாக உள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி@Bjp Tamilnadu

கன்னியாகுமரியில் பாஜக கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி திமுக - காங்கிரஸ் கட்சிகள் பெண்களுக்கு விரோதி என்றும், பாஜக கட்சி பெண்களை மதிக்கிறது என்றும் பேசினார்.

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்.

இந்நிலையில் இந்த வருடம் 5-வது முறையாக தமிழத்திற்கு வந்துள்ள மோடி, கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாஜக கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

“1991-ல் இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காஷ்மீருக்கு யாத்திரை சென்றேன். தற்போது தமிழக மக்களை சந்திக்க காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறேன். நாட்டை துண்டாட நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துள்ளனர், அதேபோல் தமிழக மக்களும் செய்வார்கள். திமுக, காங்கிரஸ் உட்பட இண்டியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும். அவர்களால் எந்த வளர்ச்சி திட்டங்களும் நடைபெறாது. தமிழ்நாட்டில் இண்டியக் கூட்டணி எடுபடாது. அவரக்ளின் வரலாற்றில் மோசடி மற்றும் ஊழல் மட்டுமே முதன்மையாக இருக்கும்.

2-ஜி ஊழலில் பெரிய பங்கு வகித்தது திமுக கட்சிதான். இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். கன்னியகுமரி எப்போதும் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளது. மக்களுக்கு பாஜக அன்பை வழங்குகிறது. ஆனால் இண்டியா கூட்டணி, மக்களின் அன்பைச் சுரண்டக் காத்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் குமரி மக்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை, பாஜக அரசு வந்த பிறகு தான் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

திமுக தமிழநாட்டின் எதிரி. அயோத்தி செல்வதற்கு முன்பு தமிழகம் வந்து, இங்குள்ள கோயில்களுக்கு சென்று பூஜைகள் செய்தேன். ஆனால் திமுக அரசு அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திற்கு கூட வரவில்லை. மேலும் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு திமுக அரசு தடைவிதித்து அதனை அழிக்க நினைத்தது. தமிழநாட்டின் பாரம்பரியத்தை மோடி இருக்கும் வரை யாரும் அசைக்க முடியாது.

தமிழர்களின் பெருமையை புறக்கணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். மத்திய அரசு எப்போதும் பெண்களை மதிக்கும். திமுக அரசு பெண்களை ஏமாற்றும் கட்சி. சனாதானத்திற்கு எதிராக பேசியவர்களை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. என்னால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை என வருத்தமாக உள்ளது. இதனை சரிசெய்ய உங்களிடம் நான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழில் பேசப்போகிறேன். என் குரலை நீங்கள் தமிழில் கேட்கவேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in