ஆஸ்திரேலிய பேட்டர் உஸ்மான் கவாஜா வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சியில் ஈடுபட்ட கவாஜா ’அனைவரும் சமம்’, ’சுதந்திரம் மனிதர்களின் பிறப்புரிமை’ ஆகிய வாசகங்கள் தாங்கிய ஷூவை அணிந்திருந்தார்.
இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவின. இஸ்ரேல் - காஸா இடையேயான போரைக் குறிப்பிட்டு கவாஜா இந்த ஷூவைப் பயன்படுத்துவதாகவும் மக்கள் கருத்து தெரிவித்துவந்தார்கள். இதனிடையே, இந்த ஷூவை அணிந்து டெஸ்டில் பங்கேற்கக் கூடாது என ஐசிசி, கவாஜாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
அரசியல் நிலைப்பாடுகள் கொண்ட கருத்துகளுக்கு இடமில்லை எனும் விதிமுறையின் அடிப்படையில் இந்த முடிவை ஐசிசி எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், இதுகுறித்து வீடியோ ஒன்றை கவாஜா வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது: நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இதனால் யாரேனும் புண்பட்டிருந்தால், சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது இல்லையா? நம்முடைய உயிர் சமம் இல்லையா? என்பதை உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். எனக்கு எந்தச் சார்பும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை ஒரு யூதரின் உயிரும் ஒரு முஸ்லிமின் உயிரும் ஒரு இந்துவின் உயிரும் ஒன்றுதான். நான் குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கிறேன்.
என்னுடைய ஷூவில் எழுந்தியிருந்தவை அரசியல் கருத்துகள் கிடையாது. அவை தங்களுடைய விதிமுறைக்கு எதிரானவை என்று என்னிடம் கூறிய ஐசிசி, அந்த ஷூவை அணியக்கூடாது எனவும் தெரிவித்தது. அவர்களுடைய பார்வையையும் முடிவையும் நான் மதிக்கிறேன். ஆனால் இதனை எதிர்த்துப் போராடி ஒப்புதல் பெற முயல்வேன்.
சுதந்திரம் அனைவரின் பிறப்புரிமை. அனைத்து உயிர்களும் சமம். நீங்கள் உடன்பட்டாலும் மறுத்தாலும் இதனை நான் தொடர்ந்து நம்புவேன் என்றார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.