முழு உடற்தகுதியை அடைந்தார் ரிஷப் பந்த்: பிசிசிஐ அறிவிப்பு

ஐபிஎல் போட்டியிலிருந்து ஷமி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விலகியுள்ளனர்.
முழு உடற்தகுதியை அடைந்தார் ரிஷப் பந்த்: பிசிசிஐ அறிவிப்பு
ANI

பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்வதற்கான முழு உடற்தகுதியை ரிஷப் பந்த் அடைந்துவிட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், ஐபிஎல் போட்டியிலிருந்து ஷமி மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விலகியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

டிசம்பர் 2022-ல் கார் விபத்தில் சிக்கிய பிறகு தொழில்முறை கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் இன்னும் பங்கேற்கவில்லை. இந்த வருட ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்த் கண்டிப்பாக விளையாடுவார் என தில்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் கூறியதைத் தொடர்ந்து, அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

இதைத் தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ரிஷப் பந்த் சிறப்பாக பேட்டிங் செய்துவருகிறார். மேலும் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். விரைவில் அவர் முழு உடற்தகுதியை எட்டிவிட்டார் என்பதை அறிவிப்போம்” என்றார். இந்நிலையில் முழு உடற்தகுதியை ரிஷப் பந்த் அடைந்துவிட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும், காயத்தால் அவதிப்பட்டுவந்த ஷமி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.

33 வயது ஷமி, கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலும் கணுக்கால் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் காயத்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். ஷமி கடந்த ஆண்டு ஐபிஎல்-லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். அவர் குஜராத் அணியில் விளையாடப் போவதில்லை என்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

மேலும், ஷமி 2024 டி20 உலகக் கோப்பையிலும் பங்கேற்கமாட்டார் எனவும் செப்டம்பர் மாதம் இந்திய அணியில் இணைவார் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார்.

அதேபோல பிரசித் கிருஷ்ணாவும் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியிலும் காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா 2022 ஐபிஎல்-லில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in