
கோயில் விடுதலை அவசியமா? அரசியலா? என்கிற தலைப்பில் ‘ஸ்மார்ட்’ ஊடக நிறுவனத்தால் ஒரு விவாத நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நடிகை கஸ்தூரி பேசியதாவது:
இந்து மதத்தில் சாதி மட்டும் தான் உள்ளது என்ற கட்டமைப்பை உடைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கோயிலைக் கையில் எடுத்தது ஆங்கிலேயர்கள். அவர்கள் போன பிறகு வந்த ஒவ்வொரு அரசும் கோயிலைத் தன் பிடியில் வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நிர்வாகப் பொறுப்பை அரசு மேற்பார்வையிட வேண்டும் என்பதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் தலையிடுவது தவறு. கோயிலில் சாதி மட்டும் தான் உள்ளதா?. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டுக் கோயில்கள் நீதிமன்றங்களாகச் செயல்பட்டுள்ளன, அரங்கேற்ற மண்டபமாகச் செயல்பட்டுள்ளன. அரசு செய்கிற விஷயங்களை அதன் தலையீடு இல்லாமல் இன்று மடங்களில் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆன்மிக இயக்கங்கள் நடத்துகிற மருத்துவமனைகளும் கல்வி நிலையங்களும் இன்று நன்றாக உள்ளன. அவர்களுடைய கல்விப் பணியை நாம் குறை சொல்லிவிட முடியுமா? அரசுக் கட்டுப்பாடுகள் இல்லாத கோயில்களில் சாதியை யாரும் பார்க்கிறார்களா? நான் எத்தனையோ மசூதிகளுக்குச் சென்றிருக்கிறேன். எனவே இந்துக் கோயில்களில் கடவுளைப் பார்க்க யார் வந்தாலும் அவர்களுக்குத் தடை இருக்கக் கூடாது என்றார்