

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ஒரு சவரன் ரூ. 91,200-க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த சில நாள்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த அக்டோபர் 17 அன்று வரலாறு காணாத அளவு ஒரு கிராம் தங்கம் ரூ. 12,200-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ. 97,600-க்கும் விற்பனையானது. அதன்பின் தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்தும் சரிந்தும் வருகிறது.
தீபாவளிப் பண்டிகையின்போது, தங்கம் ஒரு சவரன் ரூ. 95,360-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 11,920-க்கும் விற்பனையானது. பின்னர் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் 22 அன்று ஒரே நாளில் அதிரடியாக ரூ. 3,680 சரிந்து, ஒரு கிராம் ரூ. 11,540-க்கும் ஒரு சவரன் ரூ. 92,320-க்கும் விற்பனையானது.
சர்வதேச அளவிலும் தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த அக்டோபர் 22 அன்று 6.3% சரிந்து, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,082 அமெரிக்க டாலர் வரை விற்பனையானது. கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் தங்கம் விலை கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளதாகக் குறிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ரூ. 320 உயர்ந்த தங்கம் விலை, மாலை நிலவரப்படி ரூ. 1,120 குறைந்தது. அதன்படி தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ. 140 குறைந்து ரூ. 11, 400-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,120 குறைந்து ரூ. 91,200-க்கும் விற்பனை. இதன்மூலம் கடந்த 15 நாள்களுக்கு முன்பு இருந்த நிலையைத் தங்கம் விலை எட்டியுள்ளது.
இன்று வெள்ளி கிராமுக்கு ரூ. 1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.170-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,70,000-க்கும் விற்பனையாகிறது.