

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டி ஒரு சவரன் தங்கம் ரூ. 1 லட்சத்து 560-க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை சமீப காலமாகவே அவ்வப்போது புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 90,000 ஐ கடக்கத் தொடங்கியதும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவே ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தைத் தொட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது. பின்னர் டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்து மீண்டும் படிப்படியாக விலை உயர்ந்தது.
குறிப்பாக கடந்த 15 அன்று, காலை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு கண்டு ரூ. 99,680-க்கு விற்பனையாகி ரூ. 1 லட்சத்தை நெருங்கியது. பின்னர் மாலை நிலவரப்படி, ஒரே நாளில் இரண்டாவது முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ. 1,00,120-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 145 உயர்ந்து ரூ. 12,505-க்கு விற்பனையானது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அடுத்த நாளே மீண்டும் தங்கம் விலை குறையத் தொடங்கியது.
கடந்த 20 அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400-க்கும், ஒரு சவரன் ரூ.99,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலையில் தங்கம் விலை மேலும் ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று பிற்பகலில் இரண்டாவது முறையாக தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,00,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 90 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 12,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து தினமும் புதிய வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 231-க்கும், ஒரு கிலோ ரூ. 2.31 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.
உலக நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குப் பெரும் சரிவைச் சந்திக்க இது முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. தங்கத்தின் விலையிலும் இது எதிரொலித்துள்ளது.
Gold prices have hit a new high again, with a gold sovereign being sold for Rs. 1,00,560.