

தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1 லட்சத்தைக் கடந்து விற்பனை ஆவதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலக நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தும் தாழ்ந்தும் விற்பனை ஆகி வருகிறது. குறிப்பாக கடந்த தீபாவளி பண்டிகையை அடுத்து தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
புதிய உச்சம் தொட்ட தங்கம்
அதிலும், டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே, தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 15 அன்று, காலை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 99,680-க்கு விற்பனையாகி ரூ. 1 லட்சத்தை நெருங்கியது. பின்னர் மாலையில் விலை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,120-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 145 உயர்ந்து ரூ. 12,505-க்கு விற்பனையானது. பின்னர் அடுத்த நாள் விலை குறைந்தது.
தொடர்ந்து ஏறுமுகம்
ஆனால், கடந்த 20 முதல் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டது. அன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400-க்கும், ஒரு சவரன் ரூ.99,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று (டிச. 22) காலையில் தங்கம் விலை ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,840-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மீண்டும் ரூ. ஒரு லட்சம்
பின்னர் பிற்பகலில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 15 அன்று ரூ. 1,00,120 என்ற உச்சத்தைக் கடந்து, நேற்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,00,560-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ. 90 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 12,570-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்றும் தொடர்ந்து ஒரு லட்சத்தைக் கடந்து விற்பனை ஆகிறது. இன்றைய நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,02,1600-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உயரும் வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. நேற்று (டிச. 22) கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 231-க்கும், ஒரு கிலோ ரூ. 2.31 லட்சத்திற்கு விற்பனையானது. இன்று, கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234-க்கும் ஒரு கிலோவுக்கு ரூ. 3,000 உயர்ந்து, ரூ. 2.34 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
Gold prices have crossed Rs. 1 lakh per sovereign for the second consecutive day.