
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் ஆகியோர் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி அன்று புத்தாடை உடுத்தி, மக்கள் உறவினர்களுடன் இனிப்புகள் உண்டு மகிழ்ந்து, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவர். இந்த ஆண்டு தீபாவளி இன்று (அக்டோபர் 20) கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே மக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
இதற்கிடையே அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தனது எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் மோடி, “தீபாவளி நன்னாளில் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒளியின் திருநாள் நம் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் ஒளிரச் செய்யட்டும். நம்மைச் சுற்றி நேர்மறை எண்ணங்கள் உலவட்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பதிவில், “தீபாவளி திருநாள் இருளின் மீதான ஒளியின் வெற்றியையும் அறியாமையின் மீதான அறிவின் வெற்றியையும் தீயதன் மீதான நல்லதன் வெற்றியையும் குறிக்கிறது. இது சுய பிரதிபலிப்பு மற்றும் சுய முன்னேற்றத்திற்கான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவைப் பாதுகாப்பாகவும் பொறுப்புணர்வுடனும் இயற்கையான முறையிலும் நாம் கொண்டாட வேண்டும் என்று வலியுறூத்தி வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தியின் எக்ஸ் தள பதிவில், “சக குடிமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள். மகிழ்ச்சியின் தீப ஒளியில் இந்தியா ஒளிரட்டும். ஒவ்வொரு இல்லமும் ஒளியின் மகிழ்ச்சியிலும் செழிப்பிலும் காதலிலும் நிறையட்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் தனது எக்ஸ் தளப் பதிவில், “ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சித் திருநாள்; வெளிச்சத்தால் இணைந்திருக்கும் மகிழ்வுப் பெருநாள்; தீதகன்று நன்மைகள் வாழ்வில் பெருக தீபாவளி எல்லோர்க்கும் நலங்கள் தருக” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் தனது இல்லத்தின் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் வந்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரசிகர்களுக்குக் கையசைத்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். அனைவரும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில், “மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக ஊடகத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “பாரத மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம், வாழ்க்கையில் இருள் நீங்கி, ஒளி பரவ இறைவன் அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன்! இந்த தீபாவளித் திருநாளில், நாம் அனைவரும் ஒற்றுமையாக ஏற்றும் தீபங்கள், நம் பாரத தேசத்தை இவ்வுலகில் தனித்துவமாக மிளிரச் செய்யட்டும்!” என்று வாழ்த்தியுள்ளார்.