
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் காவலர் மற்றும் பக்தர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திவ்யதேசங்களில் முதலாவதான ஸ்ரீரங்கத்தில் இன்று வைகுண்ட ஏகாதேசி விழா தொடங்குகிறது. இதையடுத்து அமாவசையான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், காயத்ரி மண்டபத்தில் வரிசையில் நின்றிருந்த ஆந்திராவைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் அங்கிருந்த காவலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது சென்னா ரெட்டி என்பவரை காவலர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவருடைய முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்படவே, உதவி ஆணையர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது, பக்தரைத் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்ட சில பக்தர்கள் அங்கிருந்த உண்டியலைப் பிடித்து உலுக்கியதாகவும் இதனைத் தட்டிக்கேட்கச் சென்ற காவலரைத் தாக்கியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும், மற்ற பக்தர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறியுள்ள கோவில் நிர்வாகம் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.