ரிஷப் பந்தை வித்தியாசமான முறையில் பயன்படுத்துவோம்: பாண்டிங்

கடந்த ஐபிஎல் போட்டியில் பந்த் விளையாடாதது எங்கள் அணிக்கு மிகப்பெரிய இழப்பு.
ரிஷப் பந்தை வித்தியாசமான முறையில் பயன்படுத்துவோம்: பாண்டிங்
ANI

ரிஷப் பந்த் கேப்டனாக செயல்படவில்லை என்றாலும் அவரை வித்தியாசமான முறையில் பயன்படுத்துவோம் எனத் தில்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 2022-ல் கார் விபத்தில் சிக்கிய பிறகு தொழில்முறை கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் இன்னும் பங்கேற்கவில்லை. இந்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் கண்டிப்பாக விளையாடுவார் என ஏற்கெனவே பாண்டிங் தெரிவித்த நிலையில், கேப்டனாக அவர் செயல்படுவாரா என்ற கேள்வி எழும்பியது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள என்சிஏ-வில் உடற்தகுதிக்கானச் சான்றிதழை ரிஷப் பந்த் பெற்றதாகத் தகவல் வெளியானது.

ஐபிஎல்-லில் ரிஷப் பந்த் பங்கேற்பது குறித்து ரிக்கி பாண்டிங் பேசியதாவது:

“ரிஷப் பந்த் மீண்டும் விளையாட வேண்டும் என்பதற்காகவும், முழு உடற்தகுதியைப் பெறவும் அதிகமாக உழைத்தார். கடந்த இரண்டு வாரங்களில் சில பயிற்சி ஆட்டங்களில் அவர் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடாதது எங்கள் அணிக்கு மிகப்பெரிய இழப்பு. பந்த் கேப்டனாக செயல்படவில்லை என்றாலும் அவரை வித்தியாசமான முறையில் பயன்படுத்துவோம். அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்க்க உலகெங்கும் உள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். வித்தியாசமாக எதையும் முயற்ச்சிக்காமல் அவர் வழக்கம் போல் விளையாடினாலே அவரால் சிறப்பாகச் செயல்படமுடியும்” என்றார்.

ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று தொடங்குகிறது. தில்லி அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் மார்ச் 23-ல் விளையாடுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in