மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பாகச் செயல்பட்ட தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கெளரவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்டது. இதனால், மழைநீர் பல பகுதிகளில் தேங்கியதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு மாவட்டங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பிற அரசுத் துறை அதிகாரிகள் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வரவழைக்கப்பட்டனர்.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் குப்பை மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்நிலையில், இதில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை வழங்கினார்.
ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு தலா ரூ. 4,000 என மொத்தம் ரூ. 1,37,96,000 ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, எம்.பி தயாநிதி மாறன் மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.