ஐபிஎல் ஏலம்: சாதனை படைத்த ஆஸி. வீரர்கள்!

பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்
பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்படம்: ஐசிசி
2 min read

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு விலை போன வீரர்கள் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் படைத்துள்ளார்கள்.

ஐபிஎல் 2024 போட்டிக்கான மினி ஏலம் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது. மெகா ஏலத்தில் ஐபிஎல் அணிகள் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்பதால், நிறைய வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்க நேரிடும். இதனால், போட்டிகள் நிறைய இருக்கும். கடந்தாண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் சாம் கரண் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவர் 18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸால் தேர்வு செய்யப்பட்டார்.

மினி ஏலத்தில் வீரர்கள் தேர்வு குறைவாக இருக்கும். ஆனால், இந்த முறை ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டியுள்ளார்கள். காரணம், ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், இதற்கான சரியானப் பயிற்சியாக ஐபிஎல் இருக்கும் என்பது வீரர்கள் நம்பிக்கை. கடைசியாக 2015-ல் ஐபிஎல் போட்டியில் விளையாடிய மிட்செல் ஸ்டார்க், டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு 2024 ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வம் காட்டினார். ஆஸ்திரேலிய அணியும் உலகக் கோப்பையை வென்றதால், அந்த அணி வீரர்கள் அதிக விலைக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல, பேட் கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கம்மின்ஸை ரூ. 20.5 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இவரை எடுக்க ரூ. 20.25 கோடி வரை முயன்றது. ஐபிஎல் ஏல வரலாற்றில் ரூ. 20 கோடியைத் தொட்ட முதல் வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார்.

கம்மின்ஸின் இந்த ஐபிஎல் ஏல சாதனைக்குப் பாராட்டுகள் முழுமையாகக் குவிந்து முடிவதற்குள் மிட்செல் ஸ்டார்க் இவரது ஏல சாதனையை முறியடித்துவிட்டார். மிட்செல் ஸ்டார்க்கைத் தேர்வு செய்ய மும்பை இந்தியன்ஸ் தொடக்கத்தில் ஆர்வம் காட்டியது. மும்பையிடம் அப்போது ரூ. 12.40 கோடி மட்டுமே மீதமிருந்ததால், ரூ. 9.6 கோடிக்குப் பிறகு போட்டியிலிருந்து விலகியது. இதன்பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் இடையே போட்டி நிலவியது.

கொல்கத்தா அணி ஸ்டார்க்கை ரூ. 20.75 கோடிக்குத் தேர்வு செய்ய முயன்றது. இதன்மூலம், அதிக விலைக்குத் தேர்வானவர் என்ற பேட் கம்மின்ஸ் சாதனையை ஸ்டார்க் கடந்தார். குஜராத் டைடன்ஸ் தொடர்ந்து ஏலம் கேட்க, ஸ்டார்க் ரூ. 25 கோடியைத் தொட்டுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. கொல்கத்தா ரூ. 24.75 கோடிக்கு ஏலம் கேட்டது. குஜராத் டைடன்ஸ் கையை உயர்த்தியிருந்தால் ரூ. 25 கோடியைத் தொட்டிருக்கும். ஆனால், குஜராத் ரூ. 24.5 கோடியுடன் போட்டியிலிருந்து விலகியது.

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றிலேயே ரூ. 24.75 கோடி என அதிக விலைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸால் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in