2-0: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற ஆஸ்திரேலிய அணி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது ஆஸ்திரேலிய அணி.
டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி
டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி@icc

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த 8 அன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டாம் லேதம் 38 ரன்கள் எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் லபுஷேன் அபாரமாக விளையாடி 12 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் பெரியளவில் ரன்களை எடுக்காத நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆரம்பம் முதல் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த மேட் ஹென்றி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

94 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திரா (82 ரன்கள்), டேரில் மிட்செல் (58 ரன்கள்), வில்லியம்சன் (51 ரன்கள்) ஆகியோரின் உதவியால் 372 ரன்கள் விளாசியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 279 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன் பிறகு 2-வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 80 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் - அலெக்ஸ் கேரி கூட்டணி அமைத்து ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்டனர். மார்ஷ் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 102 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து வெளியேற கேரி மற்றும் கேப்டன் கம்மின்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அலெக்ஸ் கேரி 15 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் அடித்தும், கம்மின்ஸ் 44 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் அடித்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

இதன் மூலம் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.

அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் விருதையும், இத்தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய மேட் ஹென்றி தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது ஆஸ்திரேலிய அணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in