சிங்கப்பெண்ணே பாடலின் தாக்கம்: கபடி பயிற்சியாளருக்கு நன்றி சொன்ன ஏ.ஆர். ரஹ்மான்

இந்திய மகளிர் கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ், தன்னுடைய வாழ்க்கையில் சிங்கப்பெண்ணே பாடல் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்துப் பேச, அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்@arrahman

இந்திய மகளிர் கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ், தன்னுடைய வாழ்க்கையில் சிங்கப்பெண்ணே பாடல் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்துப் பேச, அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

கடந்த 2019-ல் வெளியான பிகில் படத்தில் இடம்பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ பாடல் பெண்மையைப் போற்றும் வகையில் இடம் பெற்று அனைவரின் வரவேற்பையும் பெற்றது. இப்பாடலைப் பாடலாசிரியர் விவேக் எழுதினார். இப்பாடல் இந்திய மகளிர் கபடி அணியின் பயிற்சியாளர் கவிதாவின் வாழ்கையை எவ்வாறு மாற்றியது என்பது குறித்து அவர் ஒரு விருது விழாவில் பகிர்ந்துள்ளார்.

கவிதா பேசியதாவது:

“2007 முதல் 2010 வரை கபடி என்றாலே கவிதா என இந்தியா முழுக்க பேசும் அளவுக்குப் புகழுடன் இருந்தேன். ஆனால் திருமணத்துக்குப் பிறகு அனைத்தையும் விட்டுவிட்டேன். 2013-க்கு பிறகு விளையாட்டைத் தொலைக்காட்சியில் கூட பார்க்க மாட்டேன். இதன் பிறகு 2019-ல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சிங்கப்பெண்ணே பாடலை கேட்டேன். அப்பாடல் என் கபடி வாழ்கையில் நான் எப்படி எல்லாம் இருந்தேன் என்பதைச் சிந்திக்க வைத்தது. என் நண்பர்கள் அனைவரும் எதாவது ஒன்றைச் சாதிக்க, நாம் மட்டும் இப்படி வீட்டிலேயே இருக்கிறோமே என கவலையாக இருந்தது. பிகில் படத்தில் ‘நம்ம நல்லா வாழ்ந்து காட்டுறதுதான், நம்ம வாழவே கூடாதுன்னு நினைக்கிறவங்களுக்கு நாம் கொடுக்கும் பதிலடி’ என ஒரு வசனம் உள்ளது. அதனை கேட்டவுடன் நாம் ஏன் மீண்டும் கபடி வாழ்கையைத் தொடங்கக்கூடாது? என தோன்றியது. இதைத் தொடர்ந்து என் கணவர், எங்களின் 5 வயது குழந்தையைத் தான் பார்த்துக்கொள்வதாகவும், என்னை மீண்டும் கபடி விளையாடவும் கூறினார். இதைத் தொடர்ந்து கபடி பயிற்சியாளராகச் சேர்ந்து இந்தியாவில் இரு பயிற்சியாளர்களில் ஒருவராகத் தேர்வு பெற்றேன். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளராகச் சேர்ந்து தங்கப்பதக்கம் வெல்ல உதவினேன். இது அனைத்துக்கும் காரணம் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் தான். அவர் தனது பாடல்கள் மூலம் பலரையும் ஊக்கப்படுத்துகிறார்” என்றார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான் தனது X தளத்தில், “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. மேலும் உயர்ந்து கொண்டே இருங்கள்” என்றார். கடந்த ஜனவரியில் கபடியில் தான் கொண்டிருந்த புகழ்பெற்ற வாழ்க்கைக்காக கவிதா தியான் சந்த் விருதை பெற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in