
திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால் அமித் ஷா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இதில் அதிமுகவுடன் இணைந்து பாஜக தேர்தலைச் சந்திக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தக் கூட்டணி உறுதி ஆன நிலையில், பாஜக பூத் கமிட்டிகளை அமித் ஷா ஒருபுறம் வலுப்படுத்திவிட்டுச் செல்ல, தற்போது அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால், தமிழக பாஜகவுக்குள் உட்கட்சிப் பூசல் முற்றிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன. குறிப்பாக, அண்மையில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் மாற்றப்பட்ட பிறகு, முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ஒத்துழையாமை போக்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வானதி சீனிவாசனுக்கும் அண்ணாமலைக்கும் மாற்றுக் கருத்து காரணமாக மோதல் போக்கு நிலவுவதாகவும் பேசப்படுகிறது.
இந்நிலையில், உட்கட்சிப் பூசலைத் தடுக்கும் வகையில் தமிழக நிர்வாகிகளை பாஜக தலைமையகம் அவசரமாக அழைத்தது. அதன்பேரில் நேற்று தமிழக பாஜக நிர்வாகிகள் தில்லி புறப்பட்டுச் சென்றனர். தில்லியில், இன்று (செப்டம்பர் 3) கிருஷ்ணா மேனன் சாலையில் அமித் ஷாவின் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், உட்கட்சிப் பூசலைத் தவிர்ப்பது, கூட்டணிக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது, 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம், தொகுதி பங்கீடு, தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் பாஜக வலுவாக இருக்கிறது? அதிமுக உடனான கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, வானதி சீனிவாசன், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இதுகுறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ”அதிகமான திருமண நிகழ்வுகள் போன்ற தனிப்பட்ட வேலைகள் இருப்பதால்தான் தில்லியில் அமித் ஷா தலைமையில் நடக்கும் பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை” என்று விளக்கமளித்துள்ளர்.
Annamalai | Amit Shah | Delhi BJP | TN BJP | TamilNadu BJP