
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ. 10 லட்சத்தைத் தமிழக அரசிடம் வழங்கியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் அதிகம் பாதிப்படைந்தன. இதனையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு முழு வேகத்தில் வழங்கி வருகிறது.
இதனிடையே, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய ஒருமாத ஊதியத்தை வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
முன்னதாக, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூ. 10 லட்சமும் ஹரிஷ் கல்யாண் ரூ. 1 லட்சமும் முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்திருந்தார்கள். சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ. 10 லட்சத்தை வழங்கினார்.
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சரும் திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலிடம் அளித்தார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மிக்ஜாம் புயல் - கன மழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிவாரணப் பணிகளை மேலும் வலுப்படுத்துகிற வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் - சகோதரர் விஷ்ணு விஷால், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.