தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், ஹிந்தித் திணிப்பை நிறுத்த வேண்டும் என நடிகை சனம் ஷெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹிந்தித் திணிப்பு குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"ஹிந்தித் திணிப்பை நிறுத்துங்கள்! இந்தியாவுக்கு தேசிய மொழி கிடையாது!
நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ஆங்கிலம் தான் ஒன்றிணைக்கும் மொழியாக உள்ளது. அதுதான் ஒன்றிணைக்கும் மொழியாகவும் இருக்கும். உலகளவில் இந்தியர்களை வலிமை பெறச் செய்வது ஆங்கிலம்தான்.
ஓரளவுக்கு உலகம் முழுக்கப் பயணம் மேற்கொண்டுள்ளேன். நம் வடமாநிலங்கள் உள்பட எந்தவொரு நாட்டுக்குச் சென்றாலும், ஆங்கிலம் இருந்தாலே போதுமானது என்பதை தனிப்பட்ட முறையில் என்னால் உறுதியளிக்க முடியும்.
எனவே, நம் மாணவர்கள் மீது ஹிந்தியைத் திணிப்பதன் மூலம் எந்த குறிப்பிட்ட பயனும் கிடையாது. இதற்குப் பதிலாக, ஆங்கிலத்துடன் நம் தாய்மொழி, அடிப்படையான அறிவியல் மற்றும் அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களைப் பயிற்றுவிப்பதில் கவனம் செலுத்தலாம்.
இது என் தனிப்பட்ட கருத்து. எந்தவோர் அரசியல் கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாடு அல்ல" என்று சனம் ஷெட்டி பதிவிட்டிருந்தார்.
சனம் ஷெட்டியின் இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் பெயர் தெரியாத ஒரு எக்ஸ் தளக் கணக்கு குறிப்பிடுகையில், "ஹிந்தி இல்லையெனில் ஷில்பா ஷெட்டி, சுனில் ஷெட்டியால் வென்றிருக்க முடியாது. வெளியில் தெரியாத கன்னட திரைத் துறையில் ஏதோவொரு மூலையில் காணாமல் போயிருப்பார்கள்" என்று பதிவிடப்பட்டது.
சனம் ஷெட்டி இதற்கும் பதிலளித்துள்ளார்.
"யாரையும் புண்படுத்த வேண்டிய தேவையில்லை. பிரச்னையை மடைமாற்ற வேண்டாம். எல்லா மொழிகளையும் எப்படி மதிக்கிறேனோ அதுபோல தான் ஹிந்தியையும் மதிக்கிறேன், விரும்புகிறேன்.
பிரச்னை மொழியல்ல. அதை மூன்றாவது மொழியாக பள்ளிப் பாடத்திட்டத்தில் திணிப்பது தான் பிரச்னை. மூன்றாவது மொழியாக ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்துக்கு மட்டும்தான் போதிய வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம் என்பது நடைமுறை நிதர்சனம் அல்ல.
அரசுத் திட்டங்கள், படிவங்கள், பலகைகள் பெரும்பாலும் ஹிந்தி மொழியில் தான் உள்ளன. இது மறைமுகமாக ஹிந்தியைத் திணிக்கும் செயல். ஹிந்தி பேசாதவர்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதி" என்று சனம் ஷெட்டி பதிவிட்டுள்ளார்.