
பிரித்விராஜ் நடித்து இயக்கியுள்ள எம்புரான் படத்தில் மோகன் லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் எனப் பலரும் நடித்துள்ளார்கள். மார்ச் 27-ல் வெளியாகவுள்ள இப்படம், இதற்கு முன்பு பிரித்விராஜ் இயக்கிய லூசிஃபர் படத்தின் 2-ம் பாகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட மலையாளப் படமான எம்புரானின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகியிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்துக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. புக் மை ஷோ இணையத்தளத்தில் ஒரு மணி நேரத்தில் இதுவரை வேறு எந்த இந்தியப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு 96,140 டிக்கெட்டுகள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பிரித்விராஜ் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பு விஜய் நடித்த லியோ படத்துக்கு 82,000 டிக்கெட்டுகளும் புஷ்பா 2 படத்துக்கு 80,000 டிக்கெட்டுகளும் ஒரு மணி நேரத்தில் விற்பனையாகி சாதனை படைத்திருந்தன.
மேலும் உலகளவில் எம்புரான் படத்துக்கான முன்பதிவு வருமானம் இப்போதே ரூ. 12 கோடியைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் எம்புரான் படத்தின் முதல் நாள் வசூலில் உலகளவில் ரூ. 40-50 கோடி வரை கிடைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.