
பிரபல இயக்குநரான சீனு ராமசாமி, 2010-ல் தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. இதன்பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அவர் இயக்கிய தர்மதுரை படம் ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றது. சமீபத்தில் சீனு ராமசாமி இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை படம் வெளியானது.
இந்நிலையில் தானும் தன் மனைவி தர்ஷனாவும் 17 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விடைபெறுவதாகப் சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.
சமீபகாலமாக ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற திரையுலகப் பிரபலங்கள் பலரும் திருமண உறவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்கள். இந்நிலையில் சீனு ராமசாமியும் அதுபோல அறிவித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சீனு ராமசாமி வெளியிட்ட அறிக்கையில், இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவரவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்தப் பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் என்னுடைய செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை இருவரும் அறிவோம். இப்பிரிவுக்கு உதவும்படி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று கூறியுள்ளார்.