.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
படத்தின் புரமோஷனுக்கு நான் பணம் எதுவும் கேட்கவில்லை என்று நடிகை அபர்ணதி கூறியுள்ளார்.
புதுமுக இயக்குநரான ஸ்ரீ வெற்றி இயக்கத்தில், அபர்ணதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘நாற்கரப்போர்’.
இப்படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இதில் பேசிய அவர், “அபர்ணதியை புரமோஷனுக்கு அழைத்தால் ரூ. 3 லட்சம் கொடுத்தால் தான் வருவேன், இல்லையெனில் வரமாட்டேன் என்றார். மேலும் தன்னுடன் மேடையில் யார் அமர வேண்டும் என்பதையும் அவரே சொன்னதால் எனக்கு கோபம் வந்தது.
இது தொடர்பாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க சொன்னதற்கு, நான் நடிகர் சங்க உறுப்பினரே கிடையாது என்றார். இதுபோன்ற நடிகை தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை” என்றார்.
இந்நிலையில் இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் அபர்ணதி, “புரமோஷனுக்கு நான் பணம் கேட்கவில்லை என்பது 200 சதவீதம் உண்மை” என்று பேசியுள்ளார்.
அபர்ணதி பேசியதாவது:
“புரமோஷனுக்கு நான் பணம் கேட்கவில்லை என்பது 200 சதவீதம் உண்மை. நான் சென்னையில் தான் இருக்கிறேன். தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து புரமோஷன் தொடர்பாக எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. டப்பிங் தொடர்பாகவும் என்னை யாரும் அழைக்கவில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளில் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. நிலுவையில் உள்ள பணத்தை தருமாறு என் தரப்பில் கேட்கப்பட்டது. படம் வெளியானப் பிறகாவது அந்த பணத்தை கொடுப்போம் என்ற வாக்கை அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இது தொடர்பாக நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.