மழை பிடிக்காத மனிதன் படத்தின் ஆரம்பத்தில் தனக்கு தெரியாமல் ஒரு நிமிடத்திற்கு காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விஜய் மில்டன் குற்றம் சாட்டியுள்ளார்.
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத் குமார் உட்பட பலர் நடித்த படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இப்படம் இன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய விஜய் மில்டன், “படத்தில் கதாநாயகன் யார்? அவர் எப்படி வந்தார்? அவர் ரௌடியா, மருத்துவரா? என்ற பல கேள்வியை முன்வைத்துத் தான் இந்த கதையை எழுதினேன்.
ஆனால், அவை அனைத்தும் படத்தின் தொடக்கத்திலேயே தெரிய வந்தது அதிர்ச்சியாக உள்ளது.
எனக்கும் அந்த ஒரு நிமிட காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தணிக்கைச் செய்யப்பட்ட படத்தில் ஒரு நிமிட காட்சியைச் சேர்க்கும் உரிமையை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
படத்தின் இயக்குநரைக் கேட்காமல் இது நடந்திருக்கிறது.
இப்படத்தை பார்க்கப்போகும் ரசிகர்கள் தயவு செய்து அந்த ஒரு நிமிட காட்சியை மறந்துவிட்டு இப்படத்தைப் பாருங்கள்” என்றார்.