
புகழ்பெற்ற பாடகர் ஸுபீன் கர்க் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என அவருடைய சக இசைக் கலைஞர் ஷேகர் ஜோதி கோஸ்வாமி குற்றம்சாட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புகழ்பெற்ற பாடகர் ஸுபீன் கர்க் கடந்த செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் நீச்சல் குளத்தில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்த் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஸுபீன் கர்க் சிங்கப்பூர் சென்றிருந்தார்.
ஸபீன் கர்க் மரணம் குறித்து சர்ச்சை நிலவி வரும் நிலையில், அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக ஸுபீன் கர்க் இசைக் குழுவைச் சேர்ந்த சக இசைக் கலைஞர் ஷேகர் ஜோதி கோஸ்வாமி குற்றம்சாட்டியுள்ளார். இவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளதாக காவல் துறை குறிப்பில் பதிவாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் தான் தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஸுபீன் கர்க் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்த் ஆகியோர் சிங்கப்பூரில் வைத்து விஷம் கொடுத்துள்ளார்கள் என்பது காவல் துறை பதிவில் ஷேகர் ஜோதி கோஸ்வாமி. நீச்சல் பயிற்சியில் ஸுபீன் கர்க் நிபுணர் என்பதால், அவர் நீரில் மூழ்கி இறந்திருக்க முடியாது என்பது வாதமாக உள்ளது.
காவல் துறை பதிவின்படி, தங்களுடைய சதித் திட்டங்களைச் செயல்படுத்த சித்தார்த் சர்மா மற்றும் ஷ்யாம்கானு மஹந்த் வெளிநாட்டைத் தேர்வு செய்ததாக கோஸ்வாமி குற்றம்சாட்டியிருக்கிறார். ஸுபீன் கர்க் மரணத்தை விபத்தாகக் காண்பிக்க இருவரும் திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்றும் கோஸ்வாமி தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
ஸுபீன் கர்க் மரணம் தொடர்பாக 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை விசாரிக்க அசாம் அரசால் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஷ்யாம்கானு மஹந்த் என்பவர் முன்னாள் டிஜிபி பாஸ்கர் ஜோதி மஹந்தின் இளைய சகோதரர். பாஸ்கர் ஜோதி மஹந்த் தற்போது அசாம் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக உள்ளார். ஷ்யாம்கானு மஹந்தின் மற்றொரு சகோதரர் நானி கோபால் மஹந்த். இவர் குவஹாத்தி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஆவதற்கு முன்பு முதல்வரின் கல்வி ஆலோசகராக இருந்தார்.
அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறையும் அசாம் காவல் துறையினருடன் விசாரணையில் இணையவுள்ளதாகத் தெரிகிறது. பொருளாதாரக் குற்றங்கள் அடிப்படையில் அவ்விரு அமைப்புகளும் விசாரணையில் இணையவுள்ளன.
ஸுபீன் கர்க் மரண வழக்கில் அவருடைய மேலாளர், இசைக் குழுவைச் சேர்ந்த இசைக் கலைஞர்களான கோஸ்வாமி, அம்ரித்பிரபா மஹந்த் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
Zubeen Garg |