ரூ. 5 கோடி இழப்பீடு வழங்கக்கோரி குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கு யுவன் ஷங்கர் ராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா குடியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளர் ஃபஸீலத்துல் ஜமீலா. இவருடைய சகோதரர் முஹமது ஜாவித், யுவன் ஷங்கர் ராஜா மீது சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் புகாரளித்துள்ளார். தனது புகாரில் வாடகை பாக்கி ரூ. 20 லட்சம் இன்னும் தரவில்லை என்றும் தன்னிடம் எதுவும் தெரிவிக்காமல் வீட்டைக் காலி செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் யுவன் ஷங்கர் ராஜா மறுத்துள்ளார். தன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ளதாக ஜாவித் மீது யுவன் ஷங்கர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இவருடையப் பேச்சு மன உளைச்சலைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள யுவன் ஷங்கர் ராஜா, இதற்காக ரூ. 5 கோடி இழப்பீடு வழங்கக் கோரி ஜாவித்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.