ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனின் மருத்துவ செலவுக்காக பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட நபருக்கு யூடியூபர்கள் ஒன்றிணைந்து உதவியுள்ளனர்.
கோவை ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு உணவகத்தில் கடந்த வாரம் பிரியாணி சாப்பிடும் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அரை மணி நேரத்திற்குள் 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ. 1 லட்சம் பரிசும் , 4 பிரியாணி சாப்பிட்டால் ரூ. 50,000 பரிசும், 3 பிரியாணி சாப்பிட்டால் ரூ. 25,000 பரிசு வழங்கப்படும் என்றுக் கூறி இப்போட்டி நடத்தப்பட்டது.
இதில் 2-வது பரிசை வென்ற கணேச மூர்த்தி என்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனின் மருத்துவச் செலவுக்காக இந்த பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் பேட்டியளித்தது சமுகவலைத்தளங்களில் கவனம் பெற்றது. இந்நிலையில் கணேச மூர்த்திக்கு உதவும் வகையில் யூடியூபர்கள் பலரும் ஒன்றிணைந்து ஒரு லட்சம் ரூபாயை (ரூ. 1,05,000) அவருக்கு வழங்கியுள்ளனர்.
யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கக்கூடிய பெப்பா ஃபூட்டி (Peppa foodie), ஃபுட் இம்ஃபரமேஷன் (Food impramation), இட்ரீஸ் எக்ஸ்ப்ளோரர் (idris explorer), இன்னிக்கு என்ன சமையல் சுனிதா (Innaiku Enna Samayal) மற்றும் டேன் ஜேஆர் விலாக் (Dan Jr Vlog) ஆகியோர் இணைந்து 55,000 ரூபாயும், யூடியூபர் இர்ஃபான் 50,000 ரூபாயும் என ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயை கணேச மூர்த்திக்கு வழங்கியுள்ளனர்.
இதனைப் பெற்றுக்கொண்ட அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். யூடியூபர்களின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.