‘பிக் பாஸ்’ விஜய் சேதுபதி: பிரபல எழுத்தாளர் விமர்சனம்

முதல் நாளைப் பொருத்தவரை விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் இன்னும் கொஞ்சம் மென்மையாக பேசியிருக்கலாமோ என்று தோன்றியது.
‘பிக் பாஸ்’ விஜய் சேதுபதி: பிரபல எழுத்தாளர் விமர்சனம்
2 min read

ஒரு பெரிய நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதியை, முழுமையாக ஏற்க முடியவில்லை என பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ், 18 போட்டியாளர்களுடன் அக். 6 அன்று தொடங்கியது. இதுவரை 7 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த வருடம் அவர் விலகியதையடுத்து, விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியை முதல்முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், ஒரு பெரிய நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதியை, முழுமையாக ஏற்க முடியவில்லை என பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை பிரபாகரின் ஃபேஸ்புக் பதிவு

“எனக்கு கமலை அவரின் அரசியல் நீங்கலாகப் பிடிக்கும் என்பதால், பிக் பாஸ் கடந்த ஏழு ஆண்டுகளில் கமல் வரும் சனி ஞாயிறுகளில் மட்டும் விளம்பரம் நீக்கிய பகுதிகளை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்ப்பதுண்டு.

போகப் போக ஒவ்வொரு சூழ்நிலைக்கும், கேள்விக்கும் அவர் எப்படி பேசுவார் என்று வாக்கியமாகவே மனம் தயாராகி விட்டதால் பார்த்தேயாக வேண்டும் என்கிற ஆர்வம் குறைந்து போனது.

இந்தாண்டு புதிதாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்போகிறார் என்றதும் இவர் எப்படி கையாள்வார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

முதல் நாளின் தொகுப்பைத் தள்ளித் தள்ளி புதிய போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி பேசி வாழ்த்தி வீட்டுக்குள் அனுப்பும் பகுதிகளைப் பார்த்தேன்.

விஜய் சேதுபதியின் உழைப்பும், தனித்துவ நடிப்பும், முதலில் உச்சரிப்பு புரியாமல் பிறகு பழகிப் போன குரலும், பேட்டிகளில் அவரின் எதார்த்தமான மிகையற்ற அலட்டலற்ற பதில்களும் சேர்த்து அவர் மீது நல்லதொரு மதிப்பை எவருக்கும் ஏற்படுத்தும். எனக்கும்.

ஆனால், ஒரு பெரிய நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அவரை என்னால் முழுமையாக ஏற்க இயலவில்லை. ஏற்கெனவே ஒரு பெரிய தொலைக்காட்சியிலும் ஒரு சமையல் நிகழ்ச்சியை அவர் தொகுத்தபோது என்னை ஈர்க்கவில்லை என்பதே நிஜம். ஆனால், விஜய் டிவியின் நிகழ்ச்சி ஆசாமிகள் கில்லாடிகள். யாரையும் தயார்ப்படுத்திவிடுவார்கள்.

முதல் நாளைப் பொருத்தவரை விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் இன்னும் கொஞ்சம் மென்மையாக பேசியிருக்கலாமோ என்று தோன்றியது.

யார் வந்தாலும், அவர்கள் பேசுவதில் ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு அவர்களை மடக்குவதிலும், கலாய்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டினார். ரவீந்திரன், ரஞ்சித் இவர்களைப் பற்றிய தனி நபர் விமரிசனம் அல்லது கருத்துக் குத்தல், நையாண்டிகள் அவசியமற்றவை.

போட்டியாளர்கள் அனைவரும் விஜய் சேதுபதி அளவுக்கு மீடியா பற்றிய அனுபவம் கொண்டவர்களாக, தனிப்பட்ட கருத்துகள் கொண்டவர்களாக இருக்க அவசியமில்லையே. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக உற்சாகமூட்டி பேசியனுப்பி, ஆட்டம் துவங்கிய பிறகு அவர்கள் தவறு செய்யும்போது அவர்களோடு வாதம் செய்வதுதானே அழகு?

ரஞ்சித்தின் நண்பர் தெரியாத்தனமாக சாப்ட்டீங்களா என்று கேட்டு கொஞ்சம் ஊர்ப் பெருமை பேசிவிட்டார். அதற்கு அவ்வளவு தூரம் வறுத்தெடுக்க வேண்டுமா?

இப்படி எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் டக்டக்கென்று கவுண்ட்டர் கொடுத்தால் போட்டியாளர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் ஒன்று உரையாடவே தயங்குவார்கள். அல்லது உங்களை பதிலுக்கு மடக்க தயார்செய்துகொண்டு உரையாடுவார்கள்”.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in