வாழை படத்துக்கு பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதிய விமர்சனம் சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 அன்று வெளியான படம் வாழை. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படம் குறித்து பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா முன்வைத்த விமர்சனம் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.
தனது விமர்சனத்தில் "வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகள் அனைத்தும் தாய்லாந்தின் லைவ் ஷோ காட்சிகளின் சாஃப்ட் வெர்ஷன் ஆகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கே நேரடியாக நடக்கும். இங்கே மறைமுகமாக நடக்கிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதான பாசாங்குதான் இந்தப் படத்தை சமூக விரோதமான படைப்பாக மாற்றுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "டீச்சரும் சிவனைந்தனும் வரும் காட்சிகள் அனைத்திலுமே பாலியல் சமிக்ஞைகள் படு தீவிரமாக உணர்த்தப்படுகின்றன. என்னைப் போல் அது புரியாத அசடுகளுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெள்ளத் தெளிவாக தன் இசையின் மூலம் அந்தப் பாலியல் சமிக்ஞைகளைப் புரிய வைத்து விடுகிறார். அந்த வகையில் வாழையை நான் ஒரு ஆபாசப் படம் என்றே சொல்லுவேன்" என்கிறார் சாரு நிவேதிதா.
ஆபாசம் என்றால் என்ன என்பதற்கும் மேற்கோள் காட்டிய அவர், "ஜப்பானிய இயக்குனர் நகிஸா ஒஷிமா எதை நீங்கள் மறைக்கிறீர்களோ அதுதான் ஆபாசம், எது இருக்கிறதோ அதைக் காண்பிப்பது ஆபாசம் அல்ல என்று கூறுவதாக தனது விமர்சனத்தில் குறிப்பிடுகிறார்.
சாரு நிவேதிதா இத்தகைய கோணத்தில் வைத்துள்ள விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்புகளும் உள்ளன. இயக்குநர் வசந்த பாலன் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், "வாழை திரைப்படம் குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் விமர்சனம் அருவருப்பானது. என் கடுமையான கண்டனங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.