
புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்பட பலரும் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் புஷ்பா. இசை - தேவி ஸ்ரீ பிரசாத்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் ‘புஷ்பா தி ரூல்’ என்ற பெயரில் உருவானது. இப்படம், இன்று (டிசம்பர் 5) வெளியானது.
இப்படத்தின் அதிகாலை காட்சிக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்படாத நிலையில், சில மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியைக் காண குடும்பத்துடன் வந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சிறப்புக் காட்சியைக் காண அல்லு அர்ஜுன் வந்ததாகவும், அவரைப் பார்க்க கூட்டத்தில் ரசிகர்கள் முந்தியடித்தபோது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.