
காப்புரிமை தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (பிப்.13) ஆஜரானார் இளையராஜா.
தங்கள் நிறுவனத்தால் உரிமம் பெறப்பட்ட இளையராஜாவால் இசையமைக்கப்பட்ட பாடல்களை யூடியூப், பிற சமூக ஊடகங்கள், இணையத்தளங்களில் வெளியிடுவதை தடுக்கக்கோரி, மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் கடந்த 2010-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பாண்டியன், தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களுக்கான பாடல்களின் உரிமம் தங்கள் நிறுவனத்திடம் இருப்பதாக மியூசிக் மாஸ்டர் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக நடந்த விசாரணைக்கு இன்று (பிப்.13) ஆஜரானார் இளையராஜா.
இந்த வழக்கு விசாரணையின்போது இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
`தன்னால் இயற்றப்பட்ட பாடல்களின் காப்புரிமை தன்னிடம் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார் இளையராஜா. அந்த பாடல்களுக்கான பணத்தை சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் பெற்றிருந்தால், அவை அந்தப் பாடல்களை உபயோகித்துக்கொள்ள பெறப்பட்ட உரிமத்திற்கான தொகை மட்டுமே என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
1990-களில் யூடியூப், இணைய வசதிகள் போன்றவை இல்லை. ஆடியோ கேசட்டுகளை வெளியிட மட்டுமே அப்போது உரிமம் வழங்கப்பட்டது. அதை வைத்துக்கொண்டு அந்தப் பாடல்களை இணையத்திலோ அல்லது யூடியூப்பிலோ வெளியிடும் உரிமை எங்களிடம் மட்டுமே உள்ளது என்றும், அவற்றை ரிங்டோன்களாக உபயோகிக்கக்கூடாது என்றும் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
எங்கள் சார்பில் ஆதாரங்களை தாக்கல் செய்வோம். இசையை இயற்றுபவருக்கே இசை சொந்தம் என்று காப்புரிமை சட்டம் கூறுகிறது. 1990-களில் அளிக்கப்பட்ட உரிமையை மூன்றாம், நான்காம் நபர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு நாங்கள்தான் அதற்கான உரிமையாளர்கள் என்று கூறி அந்த நிறுவனம் சுரண்டலில் ஈடுபட்டு வருகிறது’ என்றார்.