சீதாவாக நடிக்க சாய் பல்லவிக்கு எதிர்ப்பு: பின்னணி என்ன?

நிதேஷ் திவாரியின் ராமாயணத்தில் சீதா கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் சாய் பல்லவி
சீதாவாக நடிக்க சாய் பல்லவிக்கு எதிர்ப்பு: பின்னணி என்ன?
படம்: https://x.com/Sai_Pallavi92
1 min read

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஊடகங்களுக்கு நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார்கள். புதுதில்லியுள்ள தேசியப் போர் நினைவிடத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரம் சிங் ஆகியோருக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சாய் பல்லவி இன்று மரியாதை செலுத்தினார்கள்.

இதனிடையே, சாய் பல்லவியைப் புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்குக் காரணம் சாய் பல்லவி முன்பொரு முறை கொடுத்த பழைய நேர்காணல்.

2022-ல் கொடுத்த நேர்காணல் ஒன்றில் வன்முறை குறித்த தனது பார்வையை விளக்கிய சாய் பல்லவி, எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்பதை வலியுறுத்தினார். இதற்கு உதாரணமாக, "பாகிஸ்தானில் உள்ள மக்கள் இந்திய ராணுவ வீரர்களைப் பயங்கரவாதிகளாகப் பார்ப்பார்கள். காரணம், அவர்களுடையக் கண்ணோட்டத்தில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பற்றிய நம் பார்வையும் அப்படிதான் இருக்கும். கோணங்கள் வெவ்வேறாக இருக்கும். ஆனால், வன்முறையை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று சாய் பல்லவி பேசியிருப்பார்.

இதே நேர்காணலில், "சில நாள்களுக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வெளியானது. இந்தப் படத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் அந்த காலத்தில் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பது காட்டப்படுகிறது. இதை மதப் பிரச்னையாகப் பார்த்தால், மிகச் சமீபமாக கொரோனா காலத்தில் ஒரு இஸ்லாமியர் பசுக்களை ஏற்றிக்கொண்டு வாகனத்தில் சென்றுகொண்டிருக்கிறார். சிலர் அவரைத் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தி ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கத்தை எழுப்பச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். ஆக, முன்ப நடந்ததற்கும் தற்போது நடந்ததற்கும் என்ன வேறுபாடு உள்ளது" என்று கேள்வியெழுப்பியிருப்பார் சாய் பல்லவி. இது அப்போதே சர்ச்சையானது.

சர்ச்சையைத் தொடர்ந்து, மன்னிப்பு கோரிய சாய் பல்லவி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவித்த தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் அவர் கூறினார்.

இந்த நேர்காணலில் இடம்பெற்றுள்ள கருத்துகளை வெட்டிதான் இணையவாசிகள் எக்ஸ் தளத்தில் அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள்.

நிதேஷ் திவாரியின் ராமாயணத்தில் சீதா கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் சாய் பல்லவி. இதில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். பழைய நேர்காணல் காட்சிகளைப் பகிர்ந்து வரும் இணையவாசிகள் இதைக் குறிப்பிட்டு, சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிப்பதற்கான எதிர்ப்பையும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in