
ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிப்பதை சைமா விருதுகள் மேடையில் கமல் ஹாசன் உறுதி செய்துள்ளார்.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (சைமா) 2025 விழா துபாயில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களைக் கௌரவித்து விருதுகள் வழங்கப்பட்டன.
நாக் அஸ்வினின் கல்கி 2898 AD படத்துக்காக சிறந்த வில்லன் விருதை வென்றார் கமல் ஹாசன். அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த நடிகர் சதீஷ், கமல் ஹாசனிடம் ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து கேட்டார்.
"46 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிறப்பான தரமான சம்பவம் நடக்கவிருப்பதாகக் கேள்விபட்டோம்" என்றார் சதீஷ்.
இதற்கு, "தரமான சம்பவம் என்பதில் தான் ஆபத்தே உள்ளது. மக்கள் தான் தரம் எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மக்கள் படம் பார்த்துவிட்டுச் சொல்லட்டும்.
நடப்பதற்கு முன்பே சம்பவம் தரமாக இருக்கிறது என்று சொன்னால் எப்படி? திடீரென தரதரவென இழுத்துவிடுவார்கள். எனவே, படம் செய்துவிட்டு காட்டுவோம். அவர்களுக்குப் படம் பிடித்தால், மகிழ்ச்சி. இல்லையெனில், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றார் கமல் ஹாசன்.
நடிகர் சதீஷ் இடைமறித்து, "உலக நாயகனும் சூப்பர் ஸ்டாரும் இணையப்போவது நடக்கப்போகிறது என்பது தான் செய்தி" என்றார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய கமல் ஹாசன், "இது எனக்கு ரொம்ப நாள் ஆச்சர்யம். நாங்கள் விரும்பி பிரிந்திருந்தோம். ஒரு பிஸ்கட்டை இருவரிடம் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். ஆளுக்கு ஒரு பிஸ்கட் வேண்டும் என ஆசைப்பட்டோம். அதை வாங்கி நன்றாகச் சாப்பிட்டோம். தற்போது மறுபடியும் அரை பிஸ்கட் போதும் என்கிற சந்தோஷம் எங்களுக்கு இருக்கிறது. எனவே, நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து வருவோம்.
எங்களுடையிலான போட்டி நீங்கள் ஏற்படுத்தியது தான். எங்களுக்கு அது போட்டியே கிடையாது. வாய்ப்பு கிடைத்ததே எங்களுக்குப் பெரிய விஷயம். இருவரும் இப்படி தான் இருக்க வேண்டும், முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை அப்போதே முடிவு செய்துவிட்டோம். அப்படியே தான் அவரும் இருக்கிறார். அப்படியே தான் நானும் இருக்கிறேன். இருவரும் சேர்வது வணிக ரீதியாகப் பெரிய ஆச்சர்யமாக இருக்கலாமே தவிர, எங்களுக்கு இது எப்போதோ நடக்க வேண்டும், இப்போதாவது நடக்குதே, நடக்கட்டும் என்று தான் உள்ளது. பரஸ்பரம் இருவருடைய படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற விருப்பம் எங்களுக்கு எப்போதும் இருந்தது. நன்றாகச் சென்றுகொண்டிருக்கிறது, தற்போது வேண்டாம் என எங்களை நாங்களே தடுத்துக்கொண்டிருந்தோம்" என்றார் கமல் ஹாசன்.
ரஜினி மற்றும் கமல் ஹாசன் இணைந்து அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்கள். கடைசியாக 1979-ல் வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். கமல் ஹாசனின் தற்போதைய அறிவிப்பு மூலம், இருவரும் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கமல் ஹாசன் தயாரிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது அப்போது தற்காலிகமாகக் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டன.
Kamal Haasan | Rajinikanth | Rajini Kamal | SIIMA Awards | SIIMA Awards 2025 | SIIMA 2025 |