ஆகஸ்ட் 29-ல் திருமணம் செய்துகொள்ளப்போவதாக விஷால் மற்றும் சாய் தன்ஷிகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
சாய் தன்ஷிகா நடித்துள்ள யோகி டா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஷால் பங்கேற்கவிருப்பதாகவும் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவின் திருமணம் குறித்த அறிவிப்பு இதில் வெளியாகவிருப்பதாகவும் காலை முதல் தகவல் தீயாய் பரவியது.
எதிர்பார்த்ததைப்போல சாய் தன்ஷிகாவின் யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் விஷால் கலந்துகொண்டார். இருவரும் தங்களுடைய திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.
சாய் தன்ஷிகா பேசுகையில், "எங்களுடைய திருமணம் குறித்த அறிவிப்பு மேடையாக இதை நாங்கள் நினைக்கவில்லை. ஆம், நாங்கள் இருவரும் (விஷால் - சாய் தன்ஷிகா) ஆகஸ்ட் 29 அன்று திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறோம். விஷாலை 15 வருடங்களாக எனக்குத் தெரியும். அவரை எங்கு பார்த்தாலும் உரிய மரியாதையுடன் தான் இருப்பார். எனக்கு ஏதேனும் நடக்கும்போது, எப்போதும் குரல் கொடுத்திருக்கிறார். ஒரு பிரச்னை நடந்தபோது, எங்கள் வீட்டுக்கெல்லாம் வந்திருக்கிறார். எந்த நடிகரும் வீட்டுக்கெல்லாம் வந்ததில்லை. அவருடைய செயல் எனக்குப் பிடித்திருந்தது.
அண்மையில் தான் பேசத் தொடங்கினோம். ஆரம்பிக்கும்போது எங்களுக்கிடையே காதல் ஏற்பட்டுவிட்டது. இருவருக்கும் தோன்றியதால், பரஸ்பரம் அதை ஏற்றுக்கொண்டோம். திருமணத்தில் தான் முடியப்போகிறது என்றவுடன் எதற்காகக் காத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். ஒன்று தான், அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் நல்ல மனிதர், நன்றாக இருக்க வேண்டும்" என்றார் சாய் தன்ஷிகா.
பிறகு விஷால் பேசுகையில், "இதற்கு மேல் மூடி மறைக்க விரும்பவில்லை. என் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக உங்களை உணர்ந்து வெளிப்படையாக அறிவிக்கிறேன். ஆம், தன்ஷிகாவை முழுமையாக விரும்புகிறேன். தன்ஷிகாவை தான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்குப் பிறகும் நான் அறிவிக்கவில்லையெனில் தவறாகிவிடும். தன்ஷிகாவை நான் நன்றாகப் பார்த்துக் கொள்வேன். ஆகஸ்ட் 29 அன்று திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளோம். அன்று என் பிறந்தநாள்" என்றார் விஷால்.
சாய் தன்ஷிகா குறுக்கிட்டு கூறுகையில், "நடிகர் சங்கக் கட்டடப் பணிகளை ஆகஸ்ட் 15-க்குள் முடிக்க விஷால் போராடுகிறார். ஆகஸ்ட் 29 அன்று அவருடையப் பிறந்தநாளன்று திருமணத்தை முடிவு செய்திருக்கிறார்கள்" என்றார் சாய் தன்ஷிகா.